வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கட்டுமானத் தொழில் செய்துவரும் இவர், குடும்பத்துடன் நேற்றிரவு உணவகத்திற்குச் சென்றுள்ளார். பின்னர், நள்ளிரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், வீட்டின் உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அப்போது பீரோவில் வைத்திருந்த 90 சவரனுக்கு மேல் தங்க நகைகள் திருடுபோயிருந்தன. இதனையடுத்து அவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஆறுமுகம் வசித்துவந்த சொகுசு பங்களாவில் கண்காணிப்புக் கேமரா இருந்தும், திருடர்கள் சாமர்த்தியமாகக் கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றுள்ளனர். அதேபோல் திருடர்கள் நுழைந்தபோது காவலுக்கு இருந்த நாய் நீண்ட நேரமாக குரைத்துள்ளது. ஆனால், அதனை அக்கம்பக்கத்தினர் யாரும் பொருட்படுத்தாததால், வீட்டிலிருந்த நகைகளைத் திருடிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: காரில் கடத்தப்பட்டவர் புதுவையில் மீட்பு - காவல்துறை நடவடிக்கை