கள்ளக்குறிச்சி: புகைப்பட கலைஞர் அடித்தும், வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உளுந்தூர் காலனியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் மணிகண்டன் (27). இவர் உளுந்தூர்பேட்டையில் புகைப்படங்கள் எடுத்துக் கொடுக்கும் ஸ்டுடியோ நடத்திவந்தார்.
இச்சூழலில், சனிக்கிழமை (நவ. 29) மாலை வீட்டிலிருந்து சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் மணிகண்டன் இன்று காலை உளுந்தூர்பேட்டை - சென்னை சாலையிலுள்ள உளுந்தூர் பெரிய ஏரியில் வெட்டுக்காயங்களுடன், தலையில் அடித்த தடத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மணிகண்டன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த அவரது குடும்பத்தினர், மணிகண்டனின் உடலை பார்த்து கதறி அழுதனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர், மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மணிகண்டன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை யார் கொலை செய்தார்கள்? என்ற கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் இருசக்கர வாகனம் உளுந்தூர்பேட்டை - சென்னை சாலையிலுள்ள உணவகத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.