விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது செங்கனாங்கொல்லை கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சோழபாண்டிபுரம் செல்லும் சாலையில் உள்ள காட்டுச்செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (28). இவர் அவரது நண்பர்களாகிய அபி(25), ஏழுமலை (50) ஆகியோருடன் கூலி வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சோழபாண்டிபுரம் சென்றுள்ளார்.
அப்போது, சோழபாண்டிபுரத்தில் இருந்து செங்கனாங்கொல்லை சாலையில் திம்மச்சூரை சேர்ந்த சுரேஷ்(22) என்பவர் இருசக்கர வாகனத்தில் அவரது நண்பர் ஏழுமலையுடன் எதிர் மார்க்கத்தில் வந்துள்ளார். செங்கனாங்கொல்லையில் இருந்து சோழவாண்டிபுரம் செல்லும் சாலையில் உள்ள வளைவு பாதை அருகே வரும் போது, இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சங்கரும், சுரேஷூம் சம்பவ இடத்திலேயே பரிதபாமாக உயிரிழந்தனர். மேலும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஏழுமலை, அபி, ஏழுமலை ஆகிய மூவரும் பலத்த காயங்களுடன் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் காவல் துறையினர் சடலங்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போட்டிப்போட்டுச் சென்ற தனியார் கல்லூரிப் பேருந்து மோதியதில் மாணவர்கள் படுகாயம்!