சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம், பாரதி நகரில் சென்னை மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வருபவர் தமிம் அன்சாரி(28). இவரது கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் கடை உரிமையாளருக்கும், பல்லாவரம் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல் துறையினர், மருந்தகத்திலிருந்து தப்ப முயன்ற இரண்டு நபர்களை மடக்கி பிடித்தனர். இதையடுத்து பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், திரிசூலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்ராஜா(20), கார்த்திக்(19) ஆகிய இருவர் என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி, திருட்டு வழக்கு நிலுவையிலுள்ளன. மேலும், மருந்தகத்தில் அதிக பணம் கொடுத்து அவ்வப்போது போதைக்காக மருத்துவரின் பரிந்துரை ரசீது இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கியதாகவும், தற்போது பணம் இல்லாததால் மாத்திரைகளையும், பணத்தையும் திருட வந்ததாகவும் ஒத்துக்கொண்டுள்ளனர்.