சென்னையில் முழு ஊரடங்கினால், தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களை பிடிக்க காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் இன்று மாலை கெல்லீஸ் ஜங்ஷனில் ஐ.சி.எப் போக்குவரத்து ஆய்வாளர் குமரன்( 55) தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது அந்த வழியே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு இளைஞர்களை ஆய்வாளர் குமரன் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், இளைஞர்கள் வாகனத்தை நிறுத்தாமல் ஆய்வாளர் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களைப் பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் கொளத்தூர் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் விஜய் (23) மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த அன்பு ( 20) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இருவரையும் அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு கவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் மூடியுள்ளதால், அந்த இளைஞர்களுக்கு மதுபானம் கிடைத்தது எங்கே என விசாரணை நடைபெறுகிறது.