வியாசர்பாடி எருக்கஞ்சேரி ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் கரிகாலன் (46). மீன் வியாபாரியான கரிகாலனுக்கு மனைவி முனியம்மாள் (42), மகன் ஹரிஹரன், மகள் குணவதி ஆகியோர் இருக்கின்றனர். இவர்களோடு மனநலம் பாதிக்கப்பட்ட முனியம்மாளின் அண்ணன் ஆறுமுகமும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், குணவதிக்கு ஐந்து மாதத்திற்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இதற்காக கரிகாலன் ஏழு லட்ச ரூபாய் வரை வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். அதன்பின், கரிகாலனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் தனது வீட்டை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கரிகாலனின் மகன் ஹரிஹரன், தந்தையுடன் கோபித்துக் கொண்டு மூன்று மாதத்திற்கு முன்பு வீட்டைவிட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு கரிகாலன் தனது வீட்டை விற்று கடனை அடைத்துள்ளார்.
இன்னும் ஓரிரு நாள்களில் வீட்டை காலி செய்துவிட்டு வெளியேற வேண்டிய நிலையில், இன்று அதிகாலை கரிகாலனும் அவரது மனைவி முனியம்மாளும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். மனவளர்ச்சிக் குன்றிய ஆறுமுகம் நஞ்சு அருந்தி வீட்டின் கூடத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் எம்.கே.பி. நகர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததன்பேரில், மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு காவலர்கள் அனுப்பிவைத்தனர்.
மேலும், இது குறித்து தீவிர விசாரணையும் நடத்திவருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நகைக்கடையில் வேலைபார்த்த வடமாநில தொழிலாளி திடீர் உயிரிழப்பு