அடையாறு ஆற்றில் இருந்து லாரிகளில் மணல் ஏற்றிச்செல்வதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் நேற்றிரவு மூன்று லாரிகளில் மணல் எடுத்துச் செல்லப்படுவதை அறிந்த அபிராமபுரம் காவல் துறையினர் மூன்று லாரிகளையும் மடக்கிப்பிடித்தினர். அந்த லாரிகளில் பொதுப்பணித்துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரிகளை ஓட்டி வந்த காளியப்பன், பொன்பாண்டி மற்றும் பழனி ஆகிய ஓட்டுநர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஒப்பந்த அடிப்படையில் ஓடும் இந்த லாரிகளுக்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது. அடையாறு ஆற்றங்கரையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் சூழலில் மணலை எடுத்துச் செல்ல அனுமதி அளித்தது யார்? மணல் எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது? போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், இது தொடர்பாக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே இரவு நேரங்களில் சில காவல் துறையினரின் உதவியோடு மணல் கடத்தப்பட்டு வருவதாக உயரதிகாரிகளுக்கு கிடைத்தத் தகவலின் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'விவசாய நிலத்தில் சாய ஆலை அமைக்க அனுமதிக்கக் கூடாது'- பொதுமக்கள் மனு!