திருநெல்வேலி: வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டு வீரமரணமடைந்த சுப்பிரமணியன் உடல் ஸ்கேன் செய்யப்பட்டு, அதன் பின் உடற்கூறாய்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து அவரின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை மேற்கொள்ள ஊர்மக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியில் குற்றவாளியை பிடிக்க சென்றபோது காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது வெடிகுண்டு வெடித்ததில் குற்றவாளி துரைமுத்துவும் உயிரிழந்தார். இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி இன்று நெல்லை வந்தார்.
தொடர்ந்து, வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியன் உடலை மட்டும் ஸ்கேன் எடுப்பதற்காக பணிகள் தொடங்கியுள்ளது. இதனை திரிபாதி நேரில் சென்று ஆய்வு நடத்திய பின், காவலர் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் அனைத்து காவல் நிலையத்திலும் காவலர் சுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேற்கொண்டு சுப்பிரமணியன் உடல் உடற்கூறாய்வு செய்யப்படுகிறது. வழக்கமாக மருத்துவரின் விசாரணைக்கு பிறகே உடற்கூறாய்வு செய்யப்படும்.
காவல் துறையினர் தன்னலம் பாராமல் அயராது பணிபுரிகின்றனர்: டிஜிபி திரிபாதி!
ஆனால் தற்போது காவலர் உடல் மருத்துவர் விசாரணை முடிந்த பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்கேன் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காவலர் சுப்பிரமணியனின் உடலில் உள்பகுதியில் உள்ள காயங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக இந்த ஸ்கேன் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அதற்கான முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து நடைபெறும், இறுதி சடங்கில் காவல் துறை இயக்குநர் திரிபாதி கலந்து கொள்கிறார். சுப்பிரமணியன் வீட்டில் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. அங்கு அவரது உறவினர்களும், ஊர் பொதுமக்கள் சோகத்துடன் அமர்ந்துள்ளனர். வீரமரணமடைந்த காவலர் சுப்பிரமணியனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பண்டாரவிளையிலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ளனர்.