திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியிலுள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன்(66). இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் திருவண்ணாமலை, பள்ளிகொண்டாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(36). இவரிடம் கத்தியை காட்டி 600 ரூபாயை வழிப்பறி செய்த, அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல்(34) என்பவரை கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல், சமுத்திரம் காலனியை சேர்ந்த செல்வி (50) என்பவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரும் காவலர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேற்கூறிய மூன்று பேரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி அளித்த பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 66 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.