தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு (43). இவர் ஓட்டப்பிடாரத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி சங்கரி பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்துவருகிறார்.
இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வழக்கம்போல நேற்று காலை சங்கரி தனது மகன்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். வட்டாட்சியர் ரகு பணிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், மாலை 5.30 மணிக்கு சங்கரி வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 18 சவரன் தங்க நகைகளும், ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணமும் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, காவல் ஆய்வாளர் திருமலை காவலர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசித் தேடிவருகின்றனர்.