மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
திருப்பூரில் டெய்லராக பணியாற்றி வரும் இருமகன்களுக்கும் திருமணம் முடித்துக் கொடுத்த நிலையில் இளைய மகன் தமிழ்பாண்டி வீடு மற்றும் தோட்டத்தில் தனது சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் இன்று குடிபோதையில் வந்த தமிழ்பாண்டி, தந்தை கருத்தப்பாண்டியிடம் சொத்தை பிரித்து தருமாறு மீண்டும் சண்டையிட்டுள்ளார். வாக்குவாதம் கைகலப்பானதில் தந்தையை கீழே தள்ளி தமிழ்பாண்டி நெஞ்சில் ஏறி மிதித்துள்ளார். இதனால் கருத்தப்பாண்டிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். அக்கம்பக்கத்தினர் வரவும், தமிழ்பாண்டி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் அவரை மீட்ட உறவினர்கள் ஏழுமலை ஆரம்ப சுகாதரா நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலதவி சிகிச்சை அளிக்கப்பட்ட கருத்தப்பாண்டியை மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கருத்தப்பாண்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்றும், நெஞ்சில் மிதித்ததில் எலும்புகள் உடைந்து நுரையீரலில் குத்தி இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து, உடற்கூறு பரிசோதனைக்காக கருத்தப்பாண்டியின் உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஏ.இராமநாதபுரம் போலீஸாப் தப்பி ஓடிய மகன் தமிழ்பாண்டியை தேடி வருகின்றனர்.