கோயம்புத்தூர்: பள்ளி மாணவியை கடத்தி சென்ற கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம் சோமனூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் ரஞ்சித் குமார்(25). இவர் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியை திருமண ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றதாக மாணவியின் பெற்றோர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக இருந்த ரஞ்சித் குமாரை தேடிவந்த நிலையில், நேற்று (அக். 7) அவர் கைது செய்யபட்டார்.
இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் முன்னிறுத்திய பின் கோபிசெட்டிபாளையம் கிளைச் சிறையில் அடைத்தனர்.