சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 காவல் துறையினர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவையடுத்து காவல் துறையினர் 5 பேரும், சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 5 பேரையும் சிபிஐ அலுவலர்கள் மதுரை இராசாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சாத்தான்குளம் வழக்கு: நள்ளிரவு வரை தொடர்ந்த சிபிஐ விசாரணை
அதைத் தொடர்ந்து அவர்களை மதுரை ஆத்திகுளம் மெயின்ரோட்டில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள். மூன்று நாள்களாக அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் தனித்தனியாக வாக்குமூலமும் பெறப்பட்டது.
அவர்களின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதையடுத்து, காவல் துறையினர் நான்கு பேருக்கு மேலும் 15 நாள்கள் (ஜூலை 30) நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. காவலர் முத்துராஜுக்கு நாளை ஒரு நாள் மட்டும் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.