அரும்பாக்கம் வழியாக கடந்த மாதம் 23ஆம் தேதி, மதியம் இரண்டு மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று சென்றுள்ளது. இதில், பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் மற்றொரு தரப்பினரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சாலையில் ஓட ஓட வெட்டினர். இதில், இரண்டு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் அரும்பாக்கம் காவல் துறையினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்களுள் ஒருவரான மதனுக்கும் இந்த மோதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் எனவும் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஆர். செல்வகுமார் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "23ஆம் தேதி நடந்த சம்பவத்தில் இவர் இல்லையென்றாலும் அதற்கு முன் நடைபெற்ற 'பஸ் டே' கொண்டாட்டத்தின்போது மதன் அங்கிந்தார். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததன் அடிப்படையில் அவரை கைது செய்தோம்" என காவல் துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, மதன் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், "ஜூலை 23ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்திற்கும் மதனுக்கும் சம்பந்தமில்லை. அதற்கான முழு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மதனுக்கு பிணை அளிக்கும்படி வாதிட்டார்" என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, மறு உத்தரவு வரும்வரை மதனுக்கு நிபந்தனையின் அடிப்படையில் பிணை அளிக்கப்படுவதாகவும் மதன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதனின் தாய் அம்மு, "மதனுக்கு ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை.
இடைப்பட்ட காலத்தில் அவர் சிகிச்சைப் பெற்றுவந்தார். அதற்கான மருத்துவச் சான்றுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.
அதுமட்டுமின்றி இந்தச் சம்பவம் நடைபெற்றபோது மதன் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்தார். அதற்கான சிசிடிவி ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பிணை பெற்றுள்ளோம்.
எந்தவித சம்பந்தமும் இல்லாமல் என் மகனை காவல் துறையினர் வீடு புகுந்து அழைத்துச் சென்று பொய் வழக்குப்பதிந்து கைது செய்ததுடன், அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். எங்களுக்கு நியாயம் கிடைக்கும்" என்றார்.