விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் திருத்தங்கள் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் புது வீடு கட்டியதால் அதற்கு தீர்வை ரசீது பெற சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ரசீது வழங்க வேண்டுமெனில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என நகராட்சி வருவாய் உதவியாளர் கார்த்திகேயன் (43) தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காவலர் ஜாபர் சாதிக், இதுபற்றி விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து, சிவகாசி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி கருப்பையா தலைமையிலான காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது காவலர் ஜாபர் சாதிக்யிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது வருவாய் உதவியாளர் கார்த்திகேயனை லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் சுற்றி வளைத்து கைதுசெய்தனர். மேலும் அவர் லஞ்சமாகப் பெற்ற ரூ.10 ஆயிரத்தை பறிமுதல்செய்தனர். இந்தச் சம்பவத்தால், சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுத்த காதலியின் ஆபாசப் புகைப்படத்தைப் பகிர்ந்தவர் கைது!