புதுச்சேரி திருக்கனூர் செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த வாசுதேவன்- பிரமிளா தம்பதியினர், புதுச்சேரி டிஜிபி அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அதனை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றிவரும் வாசுதேவன், கொடாதூரைச் சேர்ந்த காவலர் ஒருவரிடமிருந்து கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் வாசுதேவனிடம் அசல், வட்டி, சீட்டு பணம் மொத்தமாக ஒன்பது லட்சம் தரவேண்டும் என அந்த காவலர் கூறியுள்ளார். அதன் பேரில் பல தவணையாக வாசுதேவன் ரூ 8.5 லட்சம் கொடுத்துள்ளதாகவும் அதை வட்டி என கூறி காவலர் வாசுதேவன் நிலத்தை அடமானமாக எழுதி வாங்கி, அந்த நிலத்தை மற்றொரு காவலருக்கு விற்பனை செய்துள்ளார்.
இதையறிந்த வாசுதேவன் - பரிமளா தம்பதியினர் இது தொடர்பாக கொடாதூர் காவலரிடம் கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து திருக்கனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் புகாரை ஏற்கவில்லை என்ற விரக்தியில், தம்பதியினர் இருவரும் டிஜிபி அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.