மண்ணடியைச் சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பரை பயங்கரவாதி தவ்பீக், தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலர் போல் நடித்து கடத்தியது தெரியவந்தது. அக்பர் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதைத் தெரிந்து வைத்துக்கொண்ட தவ்பீக், தனது கூட்டாளிகளுடன் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இவ்விவகாரத்தில் ஏற்கனவே தவ்பீக்கின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த பிலால் என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவரை சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தொழிலதிபர் அக்பர் கடத்தல் நிகழ்வில், தவ்பீக்குடன் சேர்ந்து பிலாலும் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதனிடையே தலைமறைவாக உள்ள பயங்கரவாதி தவ்பீக்கை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பிற மாநில காவல்துறையினருக்கும் தவ்பீக் மற்று கூட்டாளிகள் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தவ்பீக்கின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பில்லாததால், மாநில எல்லைகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தொழிலதிபர் கடத்தல் வழக்கு: பயங்கரவாதி தவ்ஃபீக் குறித்து திடுக்கிடும் தகவல்கள்