சேலம்: தேசிய நெடுஞ்சாலையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கனரக வாகனம் மோதி கிரானைட் தொழிலாளி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள நாரணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் மகன் ராமசாமி (50). இவர் சேலத்திலுள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில், தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்தச் சூழலில் நேற்று (செப். 22) பகல் ஓமலூர் அருகேயுள்ள ஆர்சி செட்டிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது ஹரியானா மாநிலத்தில் இருந்து குளிர்சாதனப் பொருள்களை ஏற்றி வந்துகொண்டிருந்த கனரக வாகனம் எதிர்பாராவிதமாக அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்தார்.
உடனடியாக பொதுமக்கள் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
அவருடைய சட்டைப் பையில் எவ்வித அடையாளமும் இல்லாததால் அடையாளம் கண்டறிய முடியாமல், உடலை ஓமலூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்திருந்தனர்.
இதனையடுத்து பல்வேறு இடங்களில், அவரது விபத்து குறித்த புகைப்படத்தை காண்பித்து, அவரது உறவினர்களை காவல் துறையினர் இன்று (செப். 23) கண்டறிந்தனர். இதனையடுத்து உறவினர்கள் அவரை அடையாளம் காட்டியதை அடுத்து, அவரது உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து ஓமலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்து 24 மணி நேரம் கழித்து, இறந்தவரின் உறவினர்கள் அவரின் உடலை அடையாளம் கண்டுபிடித்து கதறி அழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.