டெல்லி: தேசிய விசாரணை அமைப்புகளால் தேடப்பட்டுவந்த காலிஸ்தான் பயங்கரவாதி குர்ஜீத் சிங் நிஜ்ஜர் புதன்கிழமை (டிச.23) டெல்லி விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
அமிர்தசரஸில் உள்ள அஜ்னாலா நகரில் வசித்த குர்ஜீத் சிங் நிஜ்ஜார், 2017இல் இந்தியாவை விட்டு வெளியேறினார். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி காவலர்கள் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
சைப்ரஸ் நாட்டில் தஞ்சம்
இந்நிலையில் குர்ஜீத் சிங் நிஜ்ஜார் இன்று டெல்லி விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், “காலிஸ்தான் பயங்கரவாதி குர்ஜீத் சிங் நிஜ்ஜார் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் சைப்ரஸ் நாட்டில் பதுங்கியிருந்திருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக குர்ஜீத் சிங் நிஜ்ஜார் மீது கடந்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி 1959 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 25 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பீந்த் சிங் படுகொலை
மேலும் இவர் மீது மகாராஷ்டிரா காவல்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. காலிஸ்தான் போராட்டத்தின் போது பஞ்சாப் முதலமைச்சர் பீந்த் சிங் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை மற்றும் ப்ளூ ஸ்டார் ஆபரேஷனை எதிர்த்து மொயின் கான், ஹர்பால் சிங் ஆகியோர் சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவந்தனர். மேலும் சீக்கிய இளைஞர்கள் காலிஸ்தான் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தனர்.
திகார் சிறை
இந்தக் குற்றஞ்சாட்டில் கைது செய்யப்பட்ட மொயின் கான் 2013-2016ஆம் ஆண்டு வரை திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜக்தார் சிங் ஹவாரா உடன் பழக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளர்கள் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்