நாமக்கல் : சாதிப்பெயரைக் கூறி தாக்குதல் நடத்திய நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலக்கரை பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். லாரி ஓட்டுநரான இவர், பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரின் இரு பிள்ளைகளும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இதற்கிடையில் இவரது அண்டை வீட்டைச் சேர்ந்த ராஜேந்திரன், அவரது உறவினர்கள் சீனு, அரசு, நவீன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு சுப்பிரமணியிடம் தகராறு செய்துள்ளனர். மேலும், “பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த நீ, எப்படி என் வீட்டருகில் மாடி வீடு கட்ட முடியும்” என ஐந்து ஆண்டுகளாகவே அவர்கள் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
மேலும், சுப்பிரமணியன் வீட்டின் முன்பு ராஜேந்திரன் மாந்திரீகம் செய்து முட்டை, எலுமிச்சம்பழம், பூஜை பொருள்களை வீசி அச்சுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில், ராஜேந்திரன், அவரது உறவினர்களுடன் சேர்ந்துகொண்டு, இரு தினங்களுக்கு முன்பு சுப்பிரமணியனின் மனைவி கோமதி, மகள் அனுசியா, மகன் மிதுன் என அனைவரும் வீட்டில் இருந்தபோது, அவர்களை சாதிப் பெயரைக் கூறி இழிவுபடுத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவான வரலாறு
மேலும், தகாத வார்த்தைகளால் பேசியும், கற்கள், கம்புகள் ஆகியவற்றைக் கொண்டு சுப்பிரமணியனின் மொத்தக் குடும்பத்தையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியனின் மனைவி, மகள், மகன் ஆகியோர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் மனு ஒன்றை தற்போது அளித்துள்ளார். அதில், தனது மனைவி, பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்திய ராஜேந்திரன், அவரது உறவினர்கள் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.