வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி பகுதியில் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் தங்க நகையும் ஒரு லட்சத்து 30 ரூபாய் பணமும் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் அதே பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், முரளி என்பவர் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது வீட்டில் சிசிடிவி கேமரா இருப்பதை அறிந்த திருடர்கள் சாதுரியமாக முகமூடிகளை அணிந்து கொண்டு, இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு அருகிலிருந்த வேல் என்பவரின் வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்தனர். அப்போது அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

பின்னர் இலக்கிநாயக்கன்பட்டி கூட் ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான மதுபான கடையில் 50ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் துறையினர் திருட்டு சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டனர்.
அப்போது, முரளியின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். ராணுவ வீரர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அடச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, மீண்டும் அதே பகுதியில் இரண்டு வீடுகளில் திருட்டும் ஒரு வீட்டில் திருட்டு முயற்சியும் அரங்கேறியிருக்கும் சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.