கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வெள்ளாடிச்சி விளையைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர், பாஜகவின் பொருளாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரது அலுவலகம் நாகர்கோவிலில் உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.
லாலாவிளை பகுதியில் செல்லும்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் முத்துராமனை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் முத்துராமனின் கை மற்றும் கால்களில் அரிவாள் வெட்டு விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக மாஹீன், தாஹிர், அஷ்ரப் அலி, தர்வேஷ் மீரான், ஹக்கீம், தவ்பிக், நசீர் ஆகிய 7 பேர் மீது கோட்டார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணையின் இறுதியில் இன்று (டிச.14) நீதிபதி ராமலிங்கம் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், மாஹீனுக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மீதமுள்ள ஆறு பேருக்கும், இவ்வழக்கில் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால் 6 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: டிசம்பர் 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்: சிறு குறு தொழில் சங்கம் அறிவிப்பு!