திருச்சி மாவட்டம் துறையூர் வங்கப்பட்டிபுதூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சீனிவாசன் (25), லாரி கிளீனராக பணியாற்றி வந்தார். இவருடைய சித்தப்பா வெங்கடாசலத்தின் மகள் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பின்னர் சீனிவாசன் அந்த மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் வெங்கடாசலத்தின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை வெங்கடாசலம் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரோலி பகுதியில் இருந்த இருவரையும் மீட்ட போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின், சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இது தொடர்பான விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வனிதா, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சீனிவாசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.