தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் தேவேந்திரன். இவர், அம்பத்தூர் வானகரம் முக்கியச் சாலையில் உள்ள டன்லப் மைதானத்தில் தனது நண்பர்களுடன் நேற்று இரவு பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அம்பத்தூர் மாவட்ட கலால் துறை உதவி ஆய்வாளர் நாதமுனி, சாதாரண உடையில் அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மைதானத்தில் நின்றுகொண்டிருந்த தேவேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேரிடமும், சட்டவிரோதமாக மது விற்றதாகக் கூறி நாதமுனி சோதனை மேற்கொண்டுள்ளார்.
ஆனால், சோதனையில் மதுபாட்டில்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இது குறித்து, நாதமுனியிடம் அவர்கள் கேட்டதற்கு, அம்பத்தூர் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் அளித்த தகவலின்பேரில் சோதனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தவறான தகவலின்பேரில் சோதனை செய்த உதவி ஆய்வாளர் நாதமுனி, ஆய்வாளர் ஜார்ஜ் மில்லரைக் கடுமையாகத் திட்டி, தேவேந்திரன் ஆடியோ (கேட்பொலி) பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கேட்பொலி பதிவில், அம்பத்தூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவலர்கள், பணத்திற்காகக் கொலையை தற்கொலையாக மாற்றுவதாகவும், திருடர்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தை பறித்துக் கொள்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். கலால் பிரிவு காவலர்கள் சிலர், மதுக்கடையிலிருந்து மதுபானங்களைப் பங்கு பிரிக்கும் செயலிலும் ஈடுபடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தங்களிடம் தவறான சோதனை செய்த உதவி ஆய்வாளர் நாதமுனி, ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்க இருப்பதாகவும் அதில் தேவேந்திரன் கூறியுள்ளார்.
உதவி ஆய்வாளர், காவல் ஆய்வாளரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வெளியிடப்பட்டுள்ள கேட்பொலி பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவர் கைது!