ஏமாற்றப்பட்ட மூதாட்டி
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா(81). தபால் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு வரும் பென்ஷன் பணத்தை வைத்தும், வாடகைக்கு விட்டுள்ள வீட்டின் வாடகை பணத்தை வைத்தும் வாழ்ந்து வருகிறார்.
இவரது வீட்டில் வாடகைக்கு முனுசாமி (எ) ஸ்டீபன்(40), என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த இரு நாள்களுக்கு முன் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த வீட்டை அளப்பதற்காக வந்துள்ளனர். அப்போது வீட்டை தனக்கு சரோஜா எழுதி கொடுத்துவிட்டதாக ஸ்டீபன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சரோஜாவின் மகள்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது தான் சரோஜா ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது.
வாடகை வீட்டை சொந்தமாக்கிய ஆசாமி:
இதுகுறித்து நசரத்பேட்டை காவல் துறையிடம் புகார் அளித்ததின்பேரில் ஆய்வாளர் விஜயராகவன் விசாரணையை மேற்கொண்டார். இதில், வயதான சரோஜாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
சரோஜா வீட்டில் பல ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வந்த ஸ்டீபன், பார்ப்பவர்களிடம் அவரது மகனை போல் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே சரோஜா வயதானதால் வெளியே செல்ல முடியாமல் தவித்தபோது, தனது வங்கிக் கணக்கில் உள்ள பென்சன் பணம் ரூ.5 ஆயிரத்தை எடுப்பதற்கு கொடுத்த காசோலையைப் பயன்படுத்தி, அதனை ரூ.50 ஆயிரமாக மாற்றி பணத்தை எடுத்து ஸ்டீபன் ஏமாற்றியுள்ளார்.
அதுபோல் சுமார் ரூ.4 லட்சம் வரை பணத்தை எடுத்துள்ளார். அந்தப் பணத்தை சேர்த்து வைத்து சரோஜாவுக்கு சொந்தமான வீட்டை அவரது பெயருக்கு மாற்றி எழுதி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
சிறையில் அடைப்பு:
சரோஜாவுக்குச் சொந்தமான ஆறு வீடுகளில் வரும் வாடகை பணத்திலிருந்து ரூ.8 லட்சம் வரை மோசடி செய்துள்ளார், ஸ்டீபன். அதேபோல் அவரது வீட்டில் இருந்த மற்றொரு நிலத்தின் ஆவணங்களையும் எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் ஸ்டீபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வரதட்சணை தராததால் மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர் கைது!