2013ஆம் ஆண்டு சிலைமான் அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக திருப்பூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை மதுரை தெப்பக்குளம் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
அண்மையில் தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் கைரேகையோடு, பாலமுருகனின் கைரேகையும் ஒத்துப்போவதாக கைரேகை நிபுணர்கள் அறிக்கை அளித்திருந்தனர். அதனடிப்படையில் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையர் பழனிக்குமார் மேற்பார்வையில், உதவி ஆணையர் ரமேஷ், தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கீதாதேவி தலைமையிலான தனிப்படை காவலர்கள் திருப்பூரில் பாலமுருகனைக் கைதுசெய்தனர்.
அப்போது அவரிடமிருந்த 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 1 கிலோ எடையுள்ள வெள்ளிக்கட்டியும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இக்குற்றச் சம்பவங்களில் பாலமுருகனுடன் இணைந்து செயல்பட்ட விரகனூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் கணேஷ்குமார் (24) என்பவரையும் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல்!