அம்பத்தூர் ஒரகடம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் திலீப்குமார். இவர் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தரும் துணை ஏஜென்டாக தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், நேற்று இவரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கடத்தியதாக மனைவி சுதா அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் திலீப் குமார், ஐந்து பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இரண்டு தனிப்படைகளை அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். அப்போது செல்போன் டவரை ஆய்வு செய்ததில் திலீப்குமாரை அவர்கள் பாண்டிச்சேரிக்குக் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படையினர் பாண்டிச்சேரிக்கு விரைந்து சென்று அங்கிருந்த திலீப்குமாரை அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஏஜென்ட் சரவணன் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் வாங்கிவிட்டு அதனை திலீப்பிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட திலீப், வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல் பல மாதமாக காலம் தாழ்த்தியதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
கடத்தலில் ஈடுபட்ட சரவணன், தமிழ்ச்சந்திரன், நரேஷ் குமார் ஆகிய மூவரை கைதுசெய்து, காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு பேரைத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒருவரை கடத்திச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நகைகளைப் பறிகொடுத்த பெண்ணின் புகாரை ஏற்க மறுத்து அலைக்கழித்த காவல் துறை!