திருவனந்தபுரம்: பாலக்காடு மாவட்டம் வாளையார் பகுதியில் பட்டியலின சிறுமிகள் இருவர் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வசம் ஒப்படைக்க கேரள அரசு திங்கள்கிழமை முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த வழக்கில், வாளையார் பட்டியலின சிறுமிகளின் வன்புணர்வு படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து சிறப்பு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்து, மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டது. கொலையுண்ட சிறுமியின் தாய், இந்த வழக்கின் விசாரணை மாநில அரசின் கீழ் நடந்தால் உண்மை வெளிவராது; மத்திய புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
வாளையார் பட்டியலின சகோதரிகள் இருவர் கொலை வழக்கு 2017ஆம் ஆண்டுகளில் நாட்டை உலுக்கியது. 2017ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி, 13 வயதான சிறுமி தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த அடுத்த இரு மாதங்களில் அவளின் 9 வயதான தங்கை மார்ச் 4ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
உடற்கூராய்வு அறிக்கையில் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டிருப்பது உறுதியானது. அதிலும் இளைய சிறுமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றே உடற்கூராய்வு ஆய்வுகள் தெரிவித்தன.
இந்த வழக்கில் பிரதீப் குமார், வலிய மது, குட்டி மது, ஷிபு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை சிறப்பு நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விடுவித்தது. இதில் பிரதீப் தற்போது உயிருடன் இல்லை. அவர் கடந்தாண்டு தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் வாளையார் பட்டியலின சிறுமிகள் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் ஜனவரி 20ஆம் தேதிக்குள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே பாலியல் துன்புறுத்தல்!