கரூர் மாவட்டம் முன்னூர் ஊராட்சியைச் சேர்ந்த வேலம்பாளையம் பகுதியில் எரிந்த நிலையில் கார் ஒன்று நின்றிருந்தது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி காவல் துறையினர், அந்தக் காரில் ஆண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டதை விசாரணையில் அறிந்தனர்.
இச்சம்பவம் குறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டார். எரிந்தவர் பரமத்தி அடுத்த நொய்யல் குறுக்குச்சாலையைச் சேர்ந்த ரங்கசாமி என்பதும் அவர் ரியல் எஸ்டேட், பாக்கு மட்டை தயாரிக்கும் தொழிலை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இது குறித்து அவரது மனைவி கவிதாவிடமும் (41), மகன் அஸ்வின் குமாரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாங்கள் இருவரும்தான் சேர்ந்து கொலை செய்தோம் எனவும் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் ரங்கசாமி, கவிதாவை அடித்ததாகவும், அதை பார்த்த மகன் அஸ்வின் குமார் கோபத்தில் தந்தையை கீழே தள்ளிவிட்டு துண்டை போட்டு கழுத்தை நெரித்துள்ளனர்.
இதில் ரங்கசாமி இறந்துவிடவே உடலை காரில் எடுத்துச் சென்று குப்பம் அருகே சாலையில் வைத்து காருடன் தீயிட்டு எரித்ததாகவும் தாய், மகன் ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரையும் பரமத்தி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.