கோவை வடமதுரை பகுதியை சேர்ந்தவர் பிரபு (43). இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு (49). இவர் மக்கள் தொடர்பு அலுவலரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இவர்கள் இருவரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கல்வித்துறை, மாநகராட்சி உட்பட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 15 பேரிடம் 25 லட்ச ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர்.
பணம் கொடுத்தவர்களுக்கு போலியான அரசு நியமன ஆணை வழங்கி ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு பிரிவுக்கு புகார்கள் அளித்தனர்.
இதையடுத்து ஆட்சியர் ராசமணி சம்பந்தப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சுரேஷ்பாபு கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்திற்கும், பிரபு சென்னை எம்ஜிஆர் திரைப்பட நிறுவனத்திற்கும் பணியிடம் மாற்றப்பட்டனர்.
மேலும் இதுதொடர்பாக பிரபு, சுரேஷ் பாபு ஆகியோர் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: நீலகிரியை அறிமுகப்படுத்திய ஜான் சலிவன் - மாவட்ட ஆட்சியர் மரியாதை