சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் அதிகளவில் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில், ஆர்.கே. நகர் காவல் நிலைய ஆய்வாளர் கொடிராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதி முழுவதும் போதை, புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர்.
இந்நிலையில் தண்டையார்பேட்டை ஐஓசி ரயில்வே கேட் பகுதியில் தனிப்படை காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி அந்த ஆட்டோவை சோதனையிட நிறுத்தினர். ஆனால், அதற்குள் ஆட்டோவை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, காவல் துறையினர் விரட்டிப் பிடித்து ஆட்டோவில் இருந்தவர்களையும் ஆட்டோவையும் ஆர்.கே. நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்துள்ளனர்.
அப்போது ஆட்டோவில் ஏழு கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் ஆட்டோவில் கஞ்சாவை கடத்தியது அம்பத்தூரைச் சேர்ந்த எடிசன் ராஜ் என்பதும், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஜாகிர் உசேன், மீஞ்சூரைச் சேர்ந்த அப்துல்லா மற்றும் கொருக்குப்பேட்டையைச் சார்ந்த தனசேகர் என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி இவர்களது கூட்டாளியாக இருந்த குறுக்குபட்டியைச் சேர்ந்த குணசேகர் என்பவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
கைது செய்த நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய நபரை தனிப்படை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க...ஓஎல்எக்சில் வாடகை காரை விற்பனை செய்ய முயற்சி: காவல் துறை வலைவீச்சு!