விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 11 வயது மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த அந்தப் பெண், வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வீட்டு வேலை பார்த்துவந்தார். மேலும், இரண்டு பெண் குழந்தைகளும் விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்துவந்தனர்.
இந்நிலையில், குழந்தைகள் இருவரையும் 2018ஆம் ஆண்டு உறவினர்கள் எட்டு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், வன்கொடுமை செய்தவர்கள் உறவினர்கள் என்பதால் அந்த விவகாரத்தை வெளியே சொல்லாமல், பாண்டிச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் தனது குழந்தைகளை சேர்த்துள்ளார் தாய்.
பின்னர், சில நாள்களிலேயே குழந்தைகள் உடல் நலம் குன்றி காணப்பட்டதால், தாயிடம் பள்ளி ஆசிரியர் விசாரித்தார். அப்போது, தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து ஆசிரியரிடம் குழந்தைகள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் உடனடியாக இது குறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை செய்த எட்டு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் விழுப்புரம் காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ சிகிச்சை முடிந்து சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் தாயுடன் வசித்துவந்தனர். இந்நிலையில், அப்பெண்ணின் இரண்டாவது மகள் திடீரென மயங்கி விழுந்து நேற்று உயிரிழந்தார். இது குறித்து சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த கே.கே. நகர் காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- கூலி தொழிலாளி கைது