ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள நகரத்தார் குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் முத்துவிஜயன். கடந்த 8 முறையாக இவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களே தொடர்ச்சியாக ஊராட்சி மன்றத் தலைவர்களாக இங்கு இருந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை வயலுக்குச் சென்று கொண்டிருந்த முத்துவிஜயனை, 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்ய விரட்டியுள்ளது. அப்போது ஊருக்குள் தப்பி வந்து மயிரிழையில் உயிர் பிழைத்தார் முத்துவிஜயன்.
இது தொடர்பாக அபிராமம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில், அனைத்து காவல் சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மானாமதுரை சோதனைச் சாவடியில் சிவகங்கை மாவட்டம் உருவாட்டியை சேர்ந்த சூர்யா, பெரியதம்பிளிக்கை குரு, ஆவாரங்காடை முருகன், பொட்டல்புதூரை சேர்ந்த கிருஷ்ணசாமி ஆகிய 4 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை, காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.
அதில், நகரத்தார் குறிச்சியை சேர்ந்த பார்த்தசாரதிதான், ஊராட்சி மன்றத் தலைவர் முத்துவிஜயனை கொலை செய்யக் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பார்த்தசாரதி உட்பட கூலிப்படையை சேர்ந்த நால்வர் என 5 பேரையும் அபிராமம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், கூலிப்படையினர் வேறு கொலை வழக்குகள் எதிலும் தொடர்புடையவர்களா என்றும் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தன்று நேர்ந்த விபத்து: சோகத்தில் கிராம மக்கள்