திருநெல்வேலி: பிரபல ஹோட்டலுக்கு இனிப்பு வாங்க சென்ற வழக்கறிஞர் பிரம்மாவை ஹோட்டல் நிர்வாகிகள், ஊழியர்கள் கடுமையாக தாக்கினர்.
திருநேல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரம்மா, அளவுக்கதிகமான நுகர்வோர் வழக்குகளை வாதாடி வருகிறார். இந்நிலையில், நேற்று (அக்.23) பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியில் ஶ்ரீமதுரம் தனியார் ஹோட்டலில் வைத்து சரமாரியாக தாக்கப்பட்டார்.
ஹோட்டலுக்கு டீ குடிக்க சென்ற அவரை ஹோட்டல் நிர்வாகிகள் கதவை மூடி வெந்நீர் ஊற்றியதாகக் கூறப்படுகிறது. ஹோட்டல் நிர்வாகிகள் ஹரி, மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து வழக்கறிஞர் பிரம்மாவை காலால் எட்டி உதைப்பது, கன்னத்தில் அறைவது போன்ற காணொலி காட்சிகள் இணையத்தில் வைரலானது. பிரம்மாவுடன் சென்ற சக ஜூனியர் வழக்கறிஞர்கள் அவர் தாக்கப்படுவதை மறைமுகமாக செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹோட்டல் நிர்வாகிகள் ஹரி, மணிகண்டன் மற்றும் சூப்பர்வைசர் மூன்று பேர் என மொத்தம் 5 பேரை கைது செய்து கொலை முயற்சி, கொலை மிரட்டல் 147,148, 294b, 323, 324, 341, 509, 506(2) உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து இன்று ஐந்து பேரையும் நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜேஎம்-1 நீதிபதி (பொறுப்பு) பாபு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். ஐந்து பேரையும் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை மாநகர் பகுதியின் முக்கிய இடங்களில் பிரபலமாக இயங்கும் உணவு மற்றும் ஸ்வீட் கடைகளில் அதிகமான விலைக்கு விற்கப்படுவதாகவும், தரமற்ற பொருள்களை நுகர்வோருக்கு வழங்கப்படுவதாக வழக்கறிஞர் பிரம்மாவுக்கு வந்த தகவலின் படி 90க்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் அவர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தடுப்பணைகளை சரிசெய்வதாக வர்ணம் பூசும் பொதுப்பணித்துறை!