ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். முன்னாள் கஞ்சா வியாபாரியான இவர், சமீபகாலமாக கஞ்சா விற்பனை தொழிலை விட்டுவிட்டு கட்டட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். கட்டட மேஸ்திரியாக இருக்கும் விஜயகுமாரை கஞ்சா விற்பனை செய்வதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அடிக்கடி அழைத்து, பணம் வசூல் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச.30) மீண்டும் விஜயகுமாரை அழைத்து வந்து காவல் துறையினர், 15 கிலோ கஞ்சா வைத்திருப்பதாக வழக்கு போட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளனர். சாதாரண வழக்காக பதிவு செய்வதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பேரம் பேசியுள்ளனர்.
ஒரு லட்ச ரூபாய் கேட்ட நிலையில், நேற்று முன்தினம் (டிச.30) 30 ஆயிரம் ரூபாய் பணத்தை விஜயகுமாரின் மனைவி மகேஸ்வரி காவல் துறையினரிடம் கொடுத்துள்ளார். மீதிப் பணத்தை புரட்ட தனது தாலியை விற்க மகேஸ்வரி முயன்ற போது, உறவினர் ஒருவர் அதை தடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இந்நிலையில் விஜயகுமார் மீது சாதாரண கஞ்சா வழக்குப் பதிவு செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அவரை அழைத்துக் கொண்டு நீதிமன்ற வாசலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் அறிவுரைப்படி பணத்தை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் சரோஜினி, தலைமை காவலர் ராமசாமி ஆகியோரிடம் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை விஜயகுமாரின் மனைவி மகேஸ்வரி வழங்கினார்.
அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர், ஆய்வாளர் சரோஜினி, தலைமை காவலர் ராமசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க...நேற்று திருடன்... இன்று திருடி... திருடர்களின் கூடாரமாகிறதா தென்மாவட்ட காவல்துறை?