பிறப்பால் வாய் பேச முடியாத ஊமை, காது கேட்காவிட்டாலும் மனதிற்கு பிடித்திருந்தால் போதும். காதல் அழகு, அறிவைப் பார்த்து வருவது என்று கூறினாலும் காதல் எல்லோருக்கும் பொதுவுடைமைதான். ஆனால், காதலர்கள் எதிர்பார்ப்பதை விட ஏமாற்றம்தான் அதிகம் நிகழ்கிறது. அதுபோன்ற ஒரு உண்மை சம்பவம் நெஞ்சை கனக்கச் செய்கிறது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ஜக்கம்பேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் நந்திபதி அஸ்வினி (20). குண்டூர் மாவட்டம் சீனிவாசரவ் பெட்டாவைச் சேர்ந்தவர் ஷேக் மஸ்தன்வாலி (27). இவர்கள் இருவரும் ஹைதராபாத்தின் கச்சிபவுலியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இருவருக்கும் இடையே உருவான அறிமுகம் பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய விரும்பினர். ஆனால், அஸ்வினியின் தாய் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதாவது, ஷேக் மஸ்தான்வாலி ஏற்கனவே திருமணமானவர் என்பதால் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி அஸ்வினி -ஷேக் மஸ்தான்வாலியும் அதிகாலை நேரத்தில் பாலம் கிராமம் அருகே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் கைப்பற்றிய அடையாள அட்டையின் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்கொலை முயற்சிக்கு முன்பு அஸ்வினி தனது நண்பர்களுக்கு வீடியோ மூலம் பேசி அனுப்பியது தெரியவந்தது. இருப்பினும், அஸ்வினியின் தற்கொலை முயற்சியை நிறுத்துமாறு நண்பர்கள் அறிவுறுத்தினர். ஆனால், அஸ்வினி அவர்களுக்கு பதிலளிக்கவில்லை என நண்பர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து தலைவர் 3 மாதங்களுக்கு இடைநீக்கம்!