சென்னை: இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 3.7 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் கைப்பற்றி, மூன்று பேரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துபாயிலிருந்து மீட்பு விமானத்தில் சென்னைக்கு பெரியளவில் கடத்தல் தங்கம் கடத்தி வருவதாகவும், விமான நிலைய ஊழியர்கள் துணையுடன் இந்தக் கடத்தல் சம்பவம் நடப்பதாகவும் சென்னை விமானநிலைய சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானப் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து அனுப்பினர்.
அவ்வாறு நள்ளிரவில் வந்த துபாய் விமானப் பயணிகள் அனைவரும் சோதனை முடிந்து வெளியே சென்றுவிட்டனர். ஆனால், கடத்தல் தங்கம் சிக்கவில்லை. இதையடுத்து சுங்கத் துறையின் தனிப் பிரிவினர் விமானநிலைய கழிவறை, குப்பை தொட்டிகளைச் சோதனையிட்டனர். அப்போது முதல் தளத்தில் ஏரோபிரிட்ஜ் அருகேயுள்ள ஆண்கள் கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் தங்கக் கட்டிகள் அடங்கிய பொட்டலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த தங்கக்கட்டி பொட்டலத்தை எடுக்க வருபவரை கையும் களவுமாகப் பிடிக்க ரகசியமாக காத்திருந்தனர்.
அதிகாலை 4.30 மணியளவில் விமானநிலைய தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் இருவர், அந்த கழிவறையை சுத்தம் செய்ய உள்ளே சென்றனர். அவா்கள் வெளியே வந்ததும், நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது அவர்களுடைய பைக்குள் தங்கக்கட்டிகள் அடங்கிய பொட்டலம் இருந்துள்ளது. உடனே அந்த பொட்டலத்தைக் கைப்பற்றி பிரித்து பார்த்து சோதனை செய்தனர்.
அதனுள் 3.7 கிலோ தங்கம் இருந்தது. அதன் சா்வதேச மதிப்பு ரூ.2 கோடி என்று சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரையும் கைதுசெய்த சுங்கத்துறை அலுவலர்கள், விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் தான் இதற்கு முக்கியக் காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இவர்கள் இதைப்போல் ஏற்கெனவே கடத்தல்காரர்களுக்கு உதவியுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே துபாயிலிருந்து தங்கத்தைக் கடத்தி வந்து, சென்னை விமானநிலைய கழிவறையில் மறைத்து வைத்த நபர் தலைமறைவாகியுள்ளார். விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகள் மூலம், அந்த கடத்தல்காரரைத் தேடி வருகின்றனர். இந்தக் கடத்தல் கும்பல், விமான நிலையத்திலுள்ள தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பண ஆசை காட்டி, இதைப்போன்ற செயல்களுக்கு பயன்படுத்திவருவதாகத் தெரிகிறது.
கடத்தல் ஆசாமிகள் கழிவறை, குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, சுங்கச்சோதனை முடித்து வெளியே சென்றுவிடுவார்கள். அதன்பின்பு துப்புரவுப் பணியாளர்கள் அதை ரகசியமாக எடுத்துக்கொண்டுபோய் கடத்தல்காரர்களிடம் கொடுத்துவிட்டு கணிசமான தொகையை பெற்றுக்கொள்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.