கடந்த 2017ஆண்டு நடந்த குரூப்-2 ஏ தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்து அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை குரூப்-2 ஏ, குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளில் முறைகேடு செய்ததாக மொத்தம் 50 நபர்கள் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இடைத்தரகரான ஜெயக்குமார் உட்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். குரூப் 4 தேர்வில், அழியக்கூடிய மேஜிக் பேனாவைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கெனவே தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மேஜிக் பேனாவை தயாரித்துக் கொடுத்த சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த அசோக் என்ற நபரை சிபிசிஐடி காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இவரை சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இளைஞர் கொலை வழக்கு - குண்டர் சட்டத்தில் இருவர் கைது!