சென்னை: தாம்பரம் அருகே வாகனத் தணிக்கையின்போது விற்பனைக்காக கொண்டு சென்ற கஞ்சாவை பறிமுதல் செய்து, நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த மப்பேடு புதூர் பகுதியில், சேலையூர் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து, அவர்கள் மீது சந்தேகமடைந்த காவல் துறையினர் ஐந்து பேரையும் சேலையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் நான்கு பேரும் பதுவஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விஜய்(20), திருவஞ்சேரியைச் சேர்ந்த மணிகண்டன்(20) மகேஷ்(20), சேலையூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (22), கஸ்பாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் (22) ஆகியோர் எனத் தெரியவந்தது.
இவர்கள் கஞ்சா விற்பனை செய்வதற்காக கீரப்பாக்கம் பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கியுள்ளதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.