கேரள மாநிலம் மூணாறு செண்டுவாரை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரின் மகன் அணீத்குமார் (25). மூணாறு அரசுப் போக்குவரத்து பணிமனையில் தினக்கூலியாக பணிபுரிந்துவருகிறார். ஏப்ரல் 3ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டு விழாவிற்குச் சென்றுள்ளார்.
அங்கு மூன்று நாட்கள் தங்கிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, உணவு உண்பதற்காக ஆண்டிப்பட்டியில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர், தங்களிடம் அழகான பெண்கள் இருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தைக்காட்டி கூட்டிச்சென்று அணீத்குமாரிடமிருந்து, ஒன்றரை பவுன் தங்கச்செயின், ஐந்து கிராம் எடையுள்ள மோதிரம், ஆண்ட்ராய்டு செல்போன் மற்றும் பாக்கெட்டில் இருந்த 1,500 ரூபாய் உள்ளிட்டவற்றை மிரட்டி பறித்துள்ளனர்.
பணம், நகைகளை பறிகொடுத்து விட்டு, வீடு திரும்பிய அவர் பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அவரது பெற்றோர் இது குறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டி ஆட்டோ ஓட்டுநரான கார்த்திக் (23), தேனி முல்லை நகரைச் சேர்ந்த மனோஆனந்த் (32), போடியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மாரிமுத்து (24) மூன்று பேர் நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல் துறையினர், நகைகளை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.