இலங்கை நிழல் உலக தாதாவான அங்கொடா லொக்கா, சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்து பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்ததாகவும் கடந்த ஜூலை மாதம் கோவையில் உயிரிழந்த அவரது உடல் மதுரை தத்தநேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது காதலி, லொக்காவின் நண்பர் மற்றும் வழக்கறிஞர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட மூன்று பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கொடா லொக்கா அவரது நண்பர் சனுக்கா என்பவரிடம் தனது துப்பாக்கியை கொடுத்து வைத்திருந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து சிபிசிஐடி கடந்த ஒரு மாதமாக சனுக்காவை தீவிரமாக தேடி வருகிறது.
சனுக்கா தென்மாவட்டங்களில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலியான ஆவணங்கள் தயாரிக்க உறுதுணையாக இருந்த முகவரையும் தேடி வருகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அங்கொடா லொக்காவின் நண்பரும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞருமான சிவகாமசுந்தரி மற்றும் அவருடைய உறவினர் வங்கி கணக்கையும் சிபிசிஐடி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக தொண்டரை திட்டிய ஆ.ராசா!