தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே கூட்டுறவு பண்டகசாலை செயல்பட்டுவருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம்போல் இன்று காலை விற்பனையகத்தை திறப்பதற்காக வந்தனர். அப்போது பண்டகசாலைக்கு அருகே சாலையோர வியாபாரி ஒருவர், கரும்பு வியாபாரம் செய்துகொண்டிருந்துள்ளார்.
அவற்றை அப்புறப்படுத்துமாறு கூட்டுறவு ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால், அப்புறப்படுத்தாமல் அந்த வியாபாரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வியாபாரி, அரிவாளால் ஊழியர்களைத் தாக்கியுள்ளார். இதில் ஆண்டிபட்டி கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கோட்டைச்சாமி, விற்பனையாளர்கள் பெரியசாமி, முருகேசன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடம் வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வியாபாரியிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மறவபட்டியைச் சோந்த அழகுராஜா என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அழகுராஜைவைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் கூட்டுறவு ஊழியர்களை, கரும்பு வியாபாரி விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'லிப்ட் கொடுத்து' பணத்தை அபேஸ் செய்த பலே திருடன் !