திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பழைய பால்பண்ணை அருகே சவுபாக்கிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோவாஸ். இவர் பெரம்பலூரில் உள்ள எம்ஆர்எப் டயர் நிறுவனத்தில் தலைமை கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜோசல் டெய்சன் (4) தற்போது திருச்சி செந்தண்ணீர் புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆன்லைன் மூலம் எல்கேஜி பயின்று வந்தார்.
இந்நிலையில், இவர்கள் வசிக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் ஒருவரது வீட்டில் பிறந்தநாள் விழா இன்று (செப்.16) இரவு கொண்டாடப்பட்டது. இதில் கோவாஸ் குடும்பத்தோடு சென்று கலந்து கொண்டார். அப்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் கட்டப்பட்டிருந்தன.
மாடியின் வெளிப்புறத்தில் தொங்கிய பலூனை பால்கனி வழியாக பிடிக்க முயற்சித்த ஜோசல் டெய்சன், எதிர்பாராதவிதமாக கால் தவறி முதல் தளத்திலிருந்து தரையில் விழுந்தார். சிறுவன் விழுந்ததையறித்து பெற்றோர் அலறியடித்துக்கொண்டு தரை தளத்திற்கு ஓடினர். இதில் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி காந்தி மார்க்கெட் காவல் துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்தநாள் விழாவில் சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு' - நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா...!