சென்னை - எம்கேபி நகர் அப்துல்கலாம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர், ஜோசப் செல்வராஜ் (57). இவர் வண்ணாரப்பேட்டையிலுள்ள சிமென்ட் சாலைப் பகுதியில் சொந்தமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 26ஆம் தேதி அன்று செல்வராஜின் மகன் அலெக்சாண்டருக்குத் திருமணம் நடந்துள்ளது.
பெங்களூரில் உள்ள பெண் வீட்டாருக்கு மனைவி, மகன் அலெக்சாண்டரை அனுப்பி வைத்துவிட்டு, செல்வராஜ் மட்டும் தனது வீட்டில் தனியாக தங்கி வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன் தினம் (நவ. 4) காலை செல்வராஜ் வீட்டைப் பூட்டிவிட்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது கடைக்கு வந்து பணிபுரிந்து கொண்டிருந்தபோது செல்போனில் செல்வராஜை தொடர்பு கொண்ட பக்கத்து வீட்டுக்காரர், வீட்டில் சத்தம் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்து செல்வராஜ் பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகைகள் மற்றும் 4 வைர கம்மல் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், திருட்டு தொடர்பாக எம்கேபி நகர் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்து வந்து, ஜோசப் செல்வராஜின் அருகே உள்ள வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, கதவு ஓட்டையில் பார்க்கமுடியாதபடி பேப்பர் ஒட்டிவிட்டு, சுமார் 20 நிமிடத்தில் கொள்ளையடித்து காரில் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
கொள்ளையன் கார் எண்ணை வைத்து, கார் சென்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர், காரனோடை ஜெய் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் நெல்சன் (55) என்பது தெரியவந்து.
இதன் பின்னர் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 35 சவரன் நகைகள் மற்றும் தப்பிச்செல்ல பயன்படுத்திய கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, ஜான்சன் நெல்சனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்!