சென்னை: விமான நிலையத்திலிருந்து சரக்கு விமானத்தில் கத்தார் நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.5.1 கோடி மதிப்புடைய உயர்ரக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு சரக்கு விமானம் ஒன்று புறப்பட தயாரனது. அதில் ஏற்ற வந்த பாா்சல்களை விமானநிலைய சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனா். அப்போது சென்னையில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து டிஜிட்டல் எடை மிஷின்கள் அடங்கிய 7 பார்சல்கள் தோகாவிற்கு அனுப்புவதற்காக வந்திருந்தன.
அந்த பார்சல்களைப் பார்த்து சந்தேகமடைந்த அலுவலர்கள் உடனடியாக அவைகளைப் பிரித்து பார்த்து சோதனையிட்டனர். அந்த 7 பாா்சல்களில் 54 டிஜிட்டல் எடை கருவிகள் இருந்தன. அந்த கருவிகளின் உள்பகுதிகளில் 4.44 கிலோ உயர் ரக கஞ்சா, 700 கிராம் மெத்தெபெட்டமின் போதைப்பொருள் மற்றும் 1.2 கிலோ போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தைக் கண்டுப்பிடித்தனர்.
இதனையடுத்து, அந்த 7 பார்சல்களுக்குள் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள்கள், டிஜிட்டல் எடை கருவிகள் அனைத்தையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரை பொருள்களின் சர்வதேச மதிப்பு ரூ.5.1 கோடி என தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இதுதொடர்பாக சுங்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த பார்சல்களை சென்னையிலிருந்து கத்தார் நாட்டின் தோகாவிற்கு அனுப்பிய தனியார் ஏற்றுமதியாளர் (ஶ்ரீ ஆலயா எக்ஸ்போர்ட்டர்) நிறுவனத்தின் நிா்வாகியான தொழிலதிபரையும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஒரு தனியார் நிறுவன ஏஜெண்ட்டையும் கைது செய்தனர். அவர்களிடம் சுங்கத்துறை அலுவலர்கள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான நிலம் பறிமுதல்!