ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மாக்கினாங்கோம்பை, சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் புதிதாக வீடு கட்டி வசித்து வருபவர் கருப்புசாமி, தங்கமணி தம்பதியினர்.
இத்தம்பதிக்கு ராஜேஸ்வரி என்ற மகளும் சீனிவாசன் என்ற மகனும் உள்ளனர். மருத்துவரான ராஜேஸ்வரி திருமணமாகி கொல்கத்தாவில் கணவருடன் வசித்து வருகிறார். மகன் சீனிவாசன் மருத்துவ மேல் படிப்பிற்காக கோவையில் நீட் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், மகள் ராஜேஸ்வரியின் மாமனார் உடுமலைப்பேட்டையில் காலமாகிவிட்ட நிலையில் கருப்புசாமியும், அவரது மனைவி தங்கமணியும் வீட்டை பூட்டிவிட்டு உடுமலைப்பேட்டைக்குச் சென்றுள்ளனர். நேற்று மாலை இவர்களது வீட்டின் முன் கதவு திறக்கப்பட்டுள்ளதைப் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்துள்ளனர்.
அதன்பின் இவர்கள் ஏன் உடுமலைப்பேட்டைச் செல்லவில்லை என்ற கேள்வியுடன் கருப்புசாமி வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவுகள், பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இச்சம்பவம் கேள்விப்பட்டு உறவினர்கள் வீட்டின் முன்பு குவிந்தனர். பினார் கடத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடத்தூர் காவல்துறையினர் ஈரோட்டிலிருந்து கைரேகை, தடவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த கருப்புசாமி, தங்கமணி ஆகிய இருவரும் வீடு திரும்பினர். அவர்களை வீட்டுக்குள் அழைத்துச்சென்று என்னென்ன பொருட்கள் இருந்தது என்றும், தற்போது திருடு போயியுள்ள பொருட்கள் குறித்தும் காவல் துறையினர் கேட்டறிந்தனர்.
அவர்கள் பீரோவில் வைத்திருந்த 20 சவரன் தங்க நகைகள், ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயுள்ளதாகத் தெரிவித்தனர். அதனை தொடந்து கருப்புசாமி காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலை அருகில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பாம்புக்கு பயந்து பக்கத்து வீட்டில் தூங்கியவரின் வீட்டில் கொள்ளை!