வேலூர் மாவட்டம் காட்பாடி, காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (36). கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
வேலூர் சலவன்பேட்டை அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த விக்டர் ஜேசுதாசன் (58) என்ற மதபோதகர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை பெற்று தரப்படுவதாக குமாருக்கு தெரியவந்தது.
அதன்பேரில் குமார், விக்டர் ஜேசுதாசனை சந்தித்து தனது மகன், மகளுக்கு கல்வி உதவித் தொகை பெற்றுத் lj கோரியுள்ளார்.
இதற்கு 20 ஆயிரம் செலவாகும் என விக்டர் ஜேசுதாசன் கூறியுள்ளார். அவர் கேட்டுக்கொண்டதன்படி குமார் விக்டர் ஜேசுதாசனிடம் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இதேபோன்று காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் விக்டர் ஜேசுதாசனிடம் பணம் கொடுத்துள்ளனர். நாள்கள் கடந்தும் உதவித்தொகை வாங்கி தராததால் கொடுத்த பணத்தை குமார் கேட்டுள்ளார். பின்பு விக்டர் ஜேசுதாசன் காசோலைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்தக் காசோலை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை எனத் திரும்பியது.
இதனால், விரக்தியடைந்த குமார் விக்டர் ஜேசுதாசனிடம் இதுகுறித்து கேட்டபோது தகாத வார்த்தைகளால், திட்டியும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, விக்டர் ஜேசுதாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினியிடம் குமார் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ், ஆய்வாளர்கள் இலக்குவன், கவிதா ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விக்டர் ஜேசுதாசன் நடத்தி வந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு நபர்களிடம் கல்வி உதவித்தொகை, வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை, தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள் போன்றவை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததுது.
பின்பு அவரை இன்று (டிச.26) காவல்துறையினர் கைது செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் மதபோதகராகவும் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு பொதுக்கல்லறை ஒதுக்கித் தரக் கோரிக்கை!