லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆஸ்கார் அகாடமி விருது வழங்கும் விழாவில், அதன் தொகுப்பாளர் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்ததைத் தொடர்ந்து வில் ஸ்மித் ஆஸ்கார் அல்லது வேறு எந்த அகாடமி நிகழ்விலும் கலந்துகொள்ள 10 ஆண்டுகளுக்கு மோஷன் பிக்சர் அகாடமி தடை விதித்துள்ளது.
வில் ஸ்மித்தின் நடவடிக்கைகளுக்கான பதிலைப் பற்றி விவாதிக்க அகாடமியின் ஆளுநர்கள் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தடை எதிர்காலப் பரிந்துரைகளுக்குப் பொருந்துமா என்பது குறித்து தெளிவாக எதுவும் வரையறுக்கப்படவில்லை.
இது குறித்து மோஷன் பிக்சர்ஸ் தரப்பில், “94ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் வில் ஸ்மித் நடந்துகொண்ட விதம் சரியல்ல. அவரின் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளால், ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் மகிழ்ச்சியான நல்லெண்ண தருணங்கள் மறைக்கப்பட்டன.
மேலும் வில் ஸ்மித் நடந்துகொண் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். அவரது செயல்கள் அதிர்ச்சியூட்டுவதாகவும், வேதனை அளிப்பதாகவும் அமைந்திருந்தன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் வில் ஸ்மித் ஆஸ்கார் விருது உறுப்பினர் குழுவிலிருந்து ராஜினாமா செய்து வெளியேறினார். இந்நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி குறித்து, தொகுப்பாளர் கிறிஸ் ராக் சில கருத்துகளை கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் அவரின் கன்னத்தில் ஒரு அறைவிட்டார். இது சர்வதேச அளவில் பேசுபொருளானது. பலரும் வில் ஸ்மித்-க்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ஆஸ்கரில் வாங்கிய அறை - கிறிஸ் ராக் ஷோவிற்கான டிக்கெட் விலை ஆறுமடங்கு எகிறியது!