பெய்ஜிங்: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு சென்றது, சீனாவுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது வருகையின்போது அமெரிக்கா நெருப்போடு விளையாடுகிறது என்று சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது. அதோடு தைவான் நாட்டின் வான் பரப்பில் 27 போர் விமானங்களை பறக்கவிட்டு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதன் பின் நான்சி பெலோசி, தைவானை விட்டு வெளியேறினார்.
ஆனால், சீனா தனது போர் முனைப்பில் இருந்து ஓயவில்லை. தைவான் நாட்டின் 6 கடலோர எல்லைகளில் போர் பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. ஏவுகணை சோதனைகளையும், பேர்க்கப்பல்களையும் குவித்துவருகிறது. இந்த நடவடிக்கையால் அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தைவானை நோக்கி அனுப்பிவைத்திருப்பதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் சீனா ஒரு சிறிய நாடான தைவான் மீது போர் தொடுக்கும் முனைப்பில் நடந்துகொள்வதற்கான காரணம் குறித்து முதலில் அறிந்துகொள்ள வேண்டும். 1940-களில் நடந்த உள்நாட்டுப் போரின் போது சீனாவிலிருந்து தைவான் பிரிந்து தனி சுதந்திர நாடாக மாறியது. ஆனால், சீனா தைவானும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே கருதிவருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் எப்போதும் உயிர்ப்புடனே இருந்து வருகிறது.
அமெரிக்கா தைவானுடன் நேரிடியாக நட்புறவு வைத்திருக்காவிட்டாலும், அந்த நாட்டிற்கு ஆயுதங்களை விற்பது, பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட செயல்களில் முனைப்பு காட்டிவருகிறது. இதற்கு காரணம் தைவான் சீனாவிலிருந்து பிரிந்த போது அமெரிக்கா-தைவான் இடையே போடாப்பட்ட ஒப்பந்தமே காரணம் என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2021ஆம் ஆண்டில் சீனா தைவானைத் தாக்கினால் தைவானுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு சீனா தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்படிப்பட்ட சூழலிலேயே அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு சென்றார். போர் பதற்றமும் தொடங்கிவிட்டது.
சீனா-தைவான் எல்லையில் என்ன நடக்கிறது: தைவானைச் சுற்றி வளைத்து தாக்கும் வகையில் 6 எல்லைகளில் வெறும் 20 கிமீ தொலைவில் சீனாவின் விமானம் தாங்கி போர் கப்பல்களும், அவற்றில் போர் விமானங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தைவானுக்கு மிக நெருக்கமாக ஏவுகணைகள் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதனால் தைவான் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனாலேயே அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தைவானுக்கு அனுப்பப்ட்டுள்ளது. தேவைப்பட்டால் போர் விமானங்களும் அனுப்பி வைக்கப்படும் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
தைவானில் என்ன நடக்கிறது: சீனாவின் இந்த அச்சுறுதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைவான் நாட்டு ராணுவமும் பாதுகாப்பு ஒத்திகைகளை செய்துவருகிறது. அதன் விமானப்படை, கடற்படை, 1,65,000 ராணுவ வீரர்கள் கொண்ட ஆயுதப் படைகள் தயாராக உள்ளன. தைவான் ராணுவத்தை சீனாவுடன் ஒப்பிடுகையில் ஐந்தில் ஒரு பங்கு கூட இல்லையென்றாலும், அமெரிக்காவின் கூட்டணி பக்கபலமாக இருக்கும் என்று தைவான் நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுவருகின்றன. அதோடு ராஷ்யா விவகாரத்தை போல் தைவான் விவகாரத்தில் அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்று அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போருக்கு வாய்ப்புள்ளதா அல்லது எவ்வளவு காலம் பதற்றம் நீடிக்கும்..? : சீனாவின் ராணுவ ஒத்திகை பயிற்சிகள் மட்டுமே பதற்றத்தை உச்ச நிலையில் வைத்திருக்கின்றன. இதுகுறித்து சீனா-அமெரிக்கா-தைவான் நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் பதற்றம் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், சீனாவின் போர் பயிற்சிகளின் அளவைப் பார்க்கும்போது, அச்சப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. எதற்கும் தயாராக இருப்பது நல்லது என்கிறார்.
அமெரிக்கா-சீனா இடையிலான சாவல் போக்கு தொடர்ந்து நீடித்தாலும், சீனாவுடன் போர் தொடங்கும் எண்ணத்தில் அமெரிக்கா இருப்பதாக தெரியவில்லை. அதேபோல, தைவான் நாட்டை கேட்கும் பெய்ஜிங்கின் கோரிக்கைகளுக்கும் அமெரிக்கா தலைசாய்க்க எண்ணவில்லை என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக அரசியல் அறிஞர் டெம்பிள்மேன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் விபத்து!