லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் நேற்று மாலை, இந்தியா குளோபல் அமைப்பின் சார்பில், இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இங்கிலாந்து - இந்தியா வாரம் 2023 (UK-India week) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்தியா உடனான உண்மையான லட்சிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோம், இசைக் கலைஞர்கள் சங்கர் மகாதேவன் மற்றும் ஜாகீர் உசேன் மற்றும் பாலிவுட் நடிகை சோனம் கபூர் உள்ளிட்டோரும், இந்திய தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுடனும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்துரையாடினார்.
இந்த விவகாரத்தில், மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருப்பதை நானும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஒப்புக்கொள்கிறோம். 2030ஆம் ஆண்டிற்கான முன்னோக்குத் திட்டத்தில் நாங்கள் இணைந்து பெரும் முன்னேற்றம் அடைந்து வருகின்றோம். இங்கிலாந்து - இந்தியா என இரு நாடுகளின் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் பயன் பெறும் வகையில், ஒரு உண்மையான லட்சிய வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க விரும்புகிறோம்.
இந்தியாவிலும், இங்கும் மிகப்பெரிய வாய்ப்புகளை கொண்டு வர விரும்புவதாகவும் ரிஷி சுனக் குறிப்பிட்டு உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி மற்றும் மாமியார் சுதா மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது இங்கிலாந்து - இந்தியா வாரம் மட்டுமல்லாது, முழு இந்திய கோடைகால நிகழ்வு விழா என்று சுனக் குறிப்பிட்டு உள்ளார்.
இந்திய குளோபல் அமைப்பின் நிறுவனர் மனோஜ் லத்வா கூறியதாவது, ‘இந்திய குளோபல் அமைப்பின் (IGF) ஐந்தாவது ஆண்டு இங்கிலாந்து - இந்தியா வார கொண்டாட்டம், வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) வரை நடைபெற உள்ளது. இந்தியா - இங்கிலாந்து நாடுகளுக்கிடையே இருதரப்பு உறவுகளுக்குள் கவனம் செலுத்தும் முக்கிய துறைகள் குறித்து விவாதிக்கும் பொருட்டு, அமைச்சர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்து உள்ளது.
நாம் அனைவரும் இங்கு பல்வேறு தரப்பட்ட பின்னணிகள், அனுபவங்கள் மற்றும் பின்புலங்களில் இருந்து வந்து உள்ளோம். இருப்பினும் இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள வெற்றிகரமான கூட்டாண்மையை மேம்படுத்துவதில் எங்களுக்கு உள்ள ஆர்வமும் பங்களிப்பும்தான் எங்களை ஒன்றிணைத்து உள்ளது” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: Madurai Metro: வைகை ஆற்றின் அடியில் மெட்ரோ ரயில் பாதை - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு